கால்பந்து உலகின் மிகப்பெரிய ஜாம்பவனாக கருதப்படுபவர் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஆரம்பத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, 2009 ஆம் ஆண்டு ஸ்பெயினின் பிரபலமான கால்பந்து கிளப்பான ரியல் மெட்ரிட் அணிக்கு மாறினார்.
இந்நிலையில், கடந்த வாரம் ரியல் மெட்ரிட் அணியிலிருந்து, இத்தாலி நாட்டு கால்பந்து கிளப்பான ஜூவான்டஸ் அணி ரொனால்டோவை சுமார் 800 கோடி ரூபாய்க்கு 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது.
இதனிடையே, ரியல் மெட்ரிட் அணியிலிருந்த போது ரொனால்டோ தனது பட உரிமைகளுக்கு பல மில்லியன் பவுண்ட் வருவாய் ஈட்டியதாக கூறப்படுகிறது. இதில், சுமார் 12.1 மில்லியன் பவுண்ட் அளவிற்கு ரொனால்டோ வரி எய்ப்பு செய்தது உறுதியான நிலையில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில், இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு பதிலாக ரொனால்டோ வரி எய்ப்பு செய்த 12.1மில்லியன் பவுண்ட் மற்றும் வழக்கை நடத்த செலவான 4.7 மில்லியன் பவுண்ட் என மொத்தமாக 16.8 மில்லியன் பவுண்ட் அபராதம் செலுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம், ரொனால்டோ மீதான இந்த வழக்கு முடிவுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Mobile AppDownload Get Updated News