இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி அண்மையில் இரு சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் தொடர்களில் ஆடவர் ஒன்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
முதலில் சிங்கப்பூர் சூப்பர் சீரீஸ் தொடரிலும் பின்னர் ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடரிலும் அவர் கோப்பை வென்றார். உலகின் தலைசிறந்த வீரர்களை எல்லாம் திணறடித்து மிரட்டிய அவர் அடுத்தடுத்து இரு பட்டங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்துள்ளார்.
இவரைப் பாராட்டும் விதமாக ஏராளமான பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, சர்வதேச தரவரிசை பட்டியிலில் 11வது இடத்தில் இருந்த கிடாம்பி மூன்று இடங்கள் முன்னேறி 8வது இடத்திற்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில் கிடாம்பியைப் பாராட்டும் விதமாக டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய பேட்மிண்டன் தலைமைப் பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் ஆகியோர் பங்குபெற்றனர்.
இந்த விழாவில் கிடாம்பியின் அடுத்தடுத்த சாதனை வெற்றிகளைப் பாராட்டி ப்ரைட் ஆஃப் இந்தியா (Pride of India) விருதினை அமைச்சர் விஜய் கோயல் வழங்கினார். விழால் பேசிய கோயல், ஸ்ரீகாந்த் கிடாம்பியின் வெற்றியில் அவரது பயிற்சியாளர் கோபிசந்த்க்கு முக்கியப் பங்கிருக்கிறது என்று கூறினார். இதுவரை ஆறு முக்கிய பட்டங்களை வென்றுள்ள கிடாம்பி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
Mobile AppDownload Get Updated News