கேரளாவில் பெய்துவரும் வரலாறு காணாத மழை காரணமாக, கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 324 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசியல் கட்சிகளும், திரைப் பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை செய்து வருகின்றனர். ஒரு சில தன்னார்வல அமைப்புகளும் நிவாரணப் பொருட்களை சேகரித்து கேரளாவிற்கு அனுப்பி வருகின்றனர். மேலும், இன்று காலை கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட்ட பிரதமர் மோடி, கேரளாவிற்கு உடனடி நிவாரணமாக ரூ.500 கோடியை அறிவித்தார்.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய கால்பந்து கிளப்பாக கருதப்படும் பார்சிலோனா, கேரளா வெள்ளப்பெருக்கிற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அவர்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், “இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பார்சிலோனா அணி தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது ஆதரவையும் வழங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், மற்றொரு கால்பந்து அணியான லிவர்பூல், “கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் வருத்தத்தை தெரிவிக்கிறோம்.” என கூறி, கேரளா வெள்ளத்திற்கு நிவாரணம் அளிப்பதற்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளனர். மேலும், ஜிரோனா, மெல்போர்ன் சிட்டி கால்பந்து அணிகளும், லாலிகாவும் கேரளாவிற்கு தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளன.
Mobile AppDownload Get Updated News